# BREAKING டெல்லியில் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பிக்கள் கைது..!!
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
மக்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவருமான ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அத்துடன் வாக்காளார் பட்டியலிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இது தேர்தல் ஆணையத்தின் தோல்வியையும், பாஜகவின் மோசடியையும் காட்டுவதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, இது இந்திய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்றும் இந்த முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இந்திய தேர்தல் ஆணையமோ ராகுல் காந்தியின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என மறுத்து வருகிறது. அதேநேரம் இந்தியா கூட்டணி கட்சிகள் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து இன்று ராகுல் காந்தி தலைமையில், 25 கூட்டணி கட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில், பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பிக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து பேரணியாக சென்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட பிரியங்கா காந்தி, சஞ்சய் ராவத், அகிலேஷ் யாதவ், சுப்ரியா சுலே, மெஹபூபா மொய்த்ரா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட எம்.பிக்களும் கைது செய்யப்பட்டனர்.


