பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் ...

 
திருமணம்


பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் பெண் பிள்ளைகளுக்கு 18 வயதிற்கு மேல் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் பல பகுதிகளில் குறிப்பாக கிராமங்களில் சிறு வயதிலேயே பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. அவ்வாறு சிறு வயதிலேயே திருமணம் செய்வதால் அவர்களது உடல் நலன் வெகுவாக பாதிக்கப்படுகிறது. முதல் பிரசவத்தின் போது இறக்கும் பெண்களின் விகிதமும்  அதிகமாக இருந்து வருகிறது.  இதனால் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.

திருமணம்

இதனையடுத்து  கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது, பிரதமர் மோடி ,  மக்களை ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து காக்க அவர்களுக்கு சரியான வயதில் திருமணம் செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார். பெண்களின் திருமண வயதை 18 என்பதிலிருந்து 21 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து , திருமணச் சட்டத்தில் திருத்தம்  கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து, ஜெயா ஜேட்லி தலைமையிலான நிதி ஆயோக் சிறப்புக் குழுவையும்  கடந்த ஆண்டு அமைத்தது.

திருமணம்

இந்தக்குழு, 21 வயதில் பென்களுக்கு திருமணம் செய்தால் தான் ஆரோக்கியமான முறையில் கர்ப்பம் தரிக்க முடியும் என்பது உள்ளிட்ட  பரிந்துரை அறிக்கையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  மத்திய அரசிடம் வழங்கியது. அதனை ஏற்ற மத்திய அரசு, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த திட்டமிட்டது.  அதன் ஒரு பகுதியாக பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு பரிசீலனை செய்திருக்கிறது.