புஷ்பா 2 கூட்ட நெரிசலில் பெண் மரணம்- அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு
புஷ்பா-2 பிரீமியர் ஷோவில் கூட்ட நெரிசலில் பெண் மரணமடைந்த சம்பவத்தில் அல்லு அர்ஜுன் மீதும் தியேட்டர் நிர்வாகத்தின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செம்மரம் கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த பெரும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதற்கான ரசிகர்கள் பிரீமியர் ஷோ நேற்று இரவு காட்சிப்படுத்தப்பட்டது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் தில்சுக் நகரைச் சேர்ந்த ரேவதி (39) தனது கணவர் பாஸ்கர் மற்றும் இரண்டு குழந்தைகளான ஸ்ரீ தேஜ் (9), சன்வீகா (7) ஆகியோருடன் புஷ்பா பிரீமியர் ஷோவைக் காண ஐதராபாத் ஆர்டிசி எக்ஸ் ரோட்டில் சந்தியா தியேட்டருக்கு வந்தனர். அப்போது திடிரென நடிகர் அல்லு அர்ஜுன் சந்தியா திரையரங்கிற்கு வந்ததும் ரசிகர்கள் தியேட்டர் கேட் வழியாக உள்ளே நுழைந்தனர். இந்த கூட்ட நெரிசலில் ரேவதியும் அவரது மகன் தேஜாவும் மயங்கி விழுந்தனர். உடனே போலீசார் அவரை வித்யா நகரில் உள்ள துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்ததில்
ரேவதி ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், ஸ்ரீ தேஜாவின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால், பேகம்பேட்டில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ரேவதியின் உடல் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் இருந்து காந்தி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தியேட்டர் நிர்வாகம் அல்லு அர்ஜுன் வருவது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. மேலும் தனியார் பாதுகாப்பு கூட ஏற்பாடு செய்யவில்லை . அல்லு அர்ஜுனின் திடீர் வருகையால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது . பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் புகாரின் பேரில் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் தியேட்டர் நிர்வாகத்தின் மீது பி.என்.எஸ். பிரிவு 105,118(1) ஆர்/டபுள்யூ 3(5) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ரேவதி குடும்பத்தினரின் பொறுப்பை நான் ஏற்பதாக அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.