ஒடிசா ரயில் விபத்து - சிபிஐ விசாரணை தொடங்கியது

 
odisha

ஒடிசாவில் கோரமண்டல் ரயில் விபத்து நடந்த பகுதியில் 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில்  மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்,  ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மின்னல் வேகத்தில் மோதியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய இந்த பயங்கர விபத்தில், 275 பேர் உயிரிழந்துள்ளனர். 1,175 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். பலரது உடல்கள் சிதைந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை வரை இன்னும் 101 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்று கிழக்கு மத்திய ரெயில்வே பிரிவு மானேஜர் ரிங்கேஷ் ராய் தெரிவித்துள்ளார்.  

இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ தற்போது விசாரணையை தொடங்கியுள்ளது. கோரமண்டல் ரயில் விபத்து நடந்த பகுதிக்கு 10 பேர் கொண்ட சிபிஐ குழு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் விபத்து நடந்த விதம், விபத்துக்கான காரணம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் விபத்து தொடர்பாக ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சிபிஐ விசாரணை முடிந்த பிறகே, விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும் என கூறப்படுகிறது.