இரண்டு கட்டமாக நடைபெறும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு; முதல் பருவத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!

 
students

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முதல் பருவத் தேர்வு கால அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் போன்ற அசாதாரண சூழல் நிலவியதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. முந்தைய ஆண்டுகள் மதிப்பெண்களின் அடிப்படையில் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. 

students

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்திருக்கும் சூழலில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 2 பருவங்களாக நடத்தப்படும் என சிபிஎஸ்இ ஏற்கனவே அறிவித்திருந்தது. முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதத்திலும் இரண்டாம் பருவ தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும் என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், முதல் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 11ஆம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளதாகவும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாம் பருவத் தேர்வு அப்போதைய சூழலைப் பொறுத்து அப்ஜெக்டிவ் முறையிலோ அல்லது விரிவாக விடையளிக்க கூடிய முறையிலோ நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.