2027ல் மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு - அரசாணை வெளியிட்ட மத்திய அரசு..

 
Census2027 Census2027


2027 மார்ச் மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அரசிதழில் அரசாணையை வெளியிட்டுள்ளது.  

இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டிற்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக  கடந்த 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆகையால் 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே கடைசியாக உள்ளது.  இதனிடையே மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனவும், மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.  இந்நிலையில்  தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு அரசுதழில் வெளியிட்டுள்ளது. 

முன்னதாக நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இது தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்திய பதிவாளர் ஜெனரல், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் . இதன் தொடர்ச்சியாக  2027ல் மக்கள் தொகை  கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  இது தொடர்பாக  அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

Census2027

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு சேர்த்து மேற்கொள்ளப்படும் எனவும்,  2027 மார்ச் மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  2026ம் ஆண்டு பிற்பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கி 2028ம் ஆண்டு நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,  நாடு முழுவதும் 34 லட்சம் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் 1.3 லட்சம் அதிகாரிகளைக் கொண்டு டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 நாட்டில் இரண்டு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு  முடிவு செய்துள்ள நிலையில்,  லடாக், ஜம்மு -காஷ்மீர் யுனியன் பிரதேசங்கள் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட்  ஆகிய பனிப்பொழிவு உள்ள மாநிலங்களில் மட்டும் 2026 அக்டோபர் 1ம் தேதியை அடிப்படையாகக் கொண்டும்,   நாட்டின் பிற மாநிலங்களில் 2027 மார்ச் 1ம் தேதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.