12-14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவெடுக்கவில்லை - மத்திய அரசு தகவல்...

 
சிறார்களுக்கு தடுப்பூசி சிறார்களுக்கு தடுப்பூசி


12-14 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என  மத்திய  அரசு தகவல் தெரிவித்துள்ளது.

 இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதிதான் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.  நேற்று முன் தினத்துடன் ஓராண்டு நிறைவு பெற்றது.  இதனையொட்டி சிறப்பு தபால் தலையையும்  ஐசிஎம்ஆர்  வெளியிட்டது. முதலில் 18 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில்,  இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து 15 - 18 வயதுடையோருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதேபோல் முன்களப் பணியாளர்களுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் டோஸும்  ஜனவரி 10 முதல் செலுத்தப்பட்டு வருகிறது.  இதுவரை 43.19 லட்சத்திற்கும் மேல் பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசி

அதேபோல்  15-18 வயதுக்குட்பட்ட   சிறார்கள்களுக்கு 3,38,50,912 முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. இந்த  ஓராண்டின் நிறைவில், சுமார் 156.76 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.  இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 60 %  ஆகும்.  இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 92 % அதிகமானோர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருப்பார்கள், 68 % அதிகமானோர் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 66 லட்சம் வரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன...ஒரு சில நாட்களில் ஒரே நாளில் 1 கோடி தடுப்பூசிகளும் போடப்பட்டிருக்கிறது.

கொரோனா தடுப்பூசி

இந்த நிலையில் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி திட்டம் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் தொடங்குகிறது என தகவல் வெளியானது.  நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இந்த தகவலை வெளியிட்டது. ஆனால் தற்போது 12-14 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என  ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.