கொரோனா பரவல் அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று ஆலோசனை

 
mansuk mandaviya


இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்துகிறார். 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆயிரம், இரண்டாயிரம் என பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பரவல் ஆதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில்  தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  13,313  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நேற்று முன்தினம் 9,923 பேருக்கும், நேற்று 12,249  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது .  இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 34 ஆயிரத்து 958  ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தற்போது கொரோனாவுக்கு 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மும்பையில் 13,501 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

corona

இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவல் அதிகரிக்கும் பகுதிகளில் கட்டுப்பாடுகளை விதிப்பது, பரிசோதனையை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.