நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் 2019 ஆம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த போது ரூபாய் 317 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி நேற்று அதிகாலை ஆந்திர போலீசார் அவரை கைது செய்தனர். சந்திரபாபு நாயுடு விசாரணைக்காக விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சந்திரபாபு நாயுடுவிடம் ஊழல் வழக்கு தொடர்பாக பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதன் காரணமாக ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்தனர்.
இந்நிலையில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி சிஐடி போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரனை நீதிமன்றத்தில் தொடந்து நடைபெற்று வருகிறது.