"வாக்குத்திருட்டு... மக்களை திசைதிருப்பும் முயற்சி"- தேர்தல் ஆணையர்
வாக்குகள் திருடப்படுகின்றன என தவறான சொற்களை பயன்படுத்தி மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டுகளை முன் வைத்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “வாக்குகள் திருடப்படுகின்றன என தவறான சொற்களை பயன்படுத்தி மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள். யாருக்காகவும் அரசியல் சாசன கடமையில் இருந்து தேர்தல் ஆணையம் பின் வாங்காது. தேர்தல் ஆணையத்தைப் பொருத்தவரை எதிர்க்கட்சி ஆளும் கட்சி என்பது இல்லை. அனைவரும் சமம். எங்களுடைய நேர்மையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது. சில வாக்காளர்கள் இருமுறை வாக்களித்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஆதாரம் கேட்கும்போது பதில் இல்லை. இந்திய வாக்காளர்கள், தேர்தல் ஆணையத்தை குறிவைத்து அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர். அனைத்து கட்சிகளையும் சரிசமமாக நடத்துகிறோம். எங்கள் கடமைகளில் இருந்து ஒருபோதும் தவறமாட்டோம்.
வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் அரசமைப்புக்கு அவமதிப்பை ஏற்படுத்துகின்றன. சிலர் பொய்களையும் மக்களிடையே அச்சத்தையும் விதைக்க முயற்சிக்கின்றனர். வாக்குத் திருட்டு உள்ளிட்ட புகார்களை கண்டு தேர்தல் ஆணையம் அஞ்சாது. பீகாரின் SIR நடவடிக்கையில் அனைத்து கட்சிகளுக்கும் பங்கு உள்ளது. சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் இதுவரை 12 முறை நடத்தப்பட்டுள்ளது, இது ஒன்றும் புதிதல்ல. தேர்தலுக்கு பின் 45 நாட்களுக்குள் அரசியல் கட்சிகள், உச்சநீதிமன்றத்தை நாடமுடியும் என்ற விதி உள்ளது. இத்தனை நாட்கள் கழித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டின் உள்நோக்கம் என்ன என்பதை மக்கள் அறிவர். தேர்தல் ஆணையம் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்படுகின்றன. வாக்குத் திருட்டு' போன்ற சொற்கள் அரசியலமைப்பை அவமதிக்கும் செயலாகும். சட்டப்படி ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதன் மூலம் உருவாகின்றன. எனவே தேர்தல் ஆணையம் எந்த அரசியல் கட்சிகளுக்கு இடையில் எவ்வாறு பாகுபாடு காட்ட முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.


