மணிப்பூரில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது - பிரியங்கா காந்தி

 
Priyanka gandhi Priyanka gandhi

மணிப்பூர் மக்களின் பாதுகாப்பையும் அமைதியை மீட்டெடுக்கவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். 

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் பட்டியலின அந்தஸ்து கோரி போராடி வருகின்றனர். இதனையடுத்து இதுகுறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்குமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  அதன்படி மைதேயி சமுக மாணவர் சங்கம் சார்பில் கடந்த 3ம் தேதி பேரணி நடைபெற்றது.  இந்நிலையில், மைதேயி சமூகத்தினரை பட்டியலின பிரிவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் நடத்திய பேரணிக்கு எதிராக குகி பழங்குடியினரும் பேரணி நடத்தினர். இதில், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது வன்முறையாக வெடித்தது. அப்போது ஏற்பட்ட மோதலில் வெடித்த வன்முறை மாநிலம் முழுவதும் பரவியது.  இந்தக் கலவரத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இதையடுத்து, ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வர வழைக்கப்பட்டு வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள மாநில அரசு பரிந்துரை செய்துளது. இந்த நிலையில், நேற்று மீண்டும் அங்கு வன்முறை வெடித்த நிலையில், இதில் 10 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

manipur

இந்நிலையில், மணிப்பூரில் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மணிப்பூரில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மணிப்பூர் மக்களின் பாதுகாப்பையும் அமைதியை மீட்டெடுக்கவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.