நீரஜ் சோப்ராவின் திறமை மீண்டும் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது - கார்கே வாழ்த்து

 
Mallikarjuna Kharge Mallikarjuna Kharge

உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில்  19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 9 நாட்களாக  நடைபெற்று வந்தது. கடைசி நாளான  நேற்று இரவு ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிசுற்று நடத்தப்பட்டது.  இந்த இறுதிப்போட்டியில் 3 இந்தியர்கள் உள்பட 12 வீரர்கள் களம் கண்டனர்.  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த போட்டியில், அதனை பூர்த்தி செய்யும் விதமாக  இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நீரஜ் சோப்ராவின் அட்டகாசமான திறமை மீண்டும் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது. அவரது புத்திசாலித்தனம், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு இப்போது உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியராக அவரை உருவாக்கியுள்ளது. அற்புதமான சாதனைகளின் பட்டியலில் மற்றொரு  இடத்தை பிடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் நீரஜ்! நீங்கள் வலிமைக்கு மேல் வலிமையாகி வளர்ந்து வரும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.