கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி - மல்லிகார்ஜுன கார்கே பேச்சு!

 
kharge

கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நாளுக்கு நாள் அனல் பறக்கும் பரப்புரையால், தலைவர்கள் வருகை மற்றும்  நட்சத்திர பேச்சாளர்கள் என கர்நாடக தேர்தல் பரப்புரை  உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அத்துடன் அரசியல் கட்சிகள் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதவகையில் பாஜக கடந்த திங்கள் கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள், இலவச பால், ரேஷன் கடைகளில் 5 கிலோ சிறுதானியங்கள் வழங்கப்படும் என அசத்தலான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. இதேபோல் செவ்வாய்கிழமை காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தேர்தல் பிரசாரம் வருகிற 8-ந்தேதியுடன் முடிவடைகிறது. பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர்கள் அமித்ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே, கர்நாடக சட்டசபை தோ்தலையொட்டி ராய்ச்சூர் மாவட்டம் சுரபுரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-  உள்துறை மந்திரி அமித்ஷா இங்கு வந்து பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த பகுதியின் வளர்ச்சிக்கு அவர் என்ன செய்தார்?. இங்கு புதிதாக எந்த தொழில் நிறுவனங்களும் தொடங்கப்படவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்கவில்லை. சமுதாயத்தை உடைப்பது தான் பா.ஜனதாவின் நோக்கம். சமுதாயத்தை முன்னேற்றும் பணியை பா.ஜனதா எப்போதும் செய்தது இல்லை.  கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கலவரம் ஏற்படும் என்று அமித்ஷா சொல்கிறார். நாட்டில் 60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தது. எங்கு கலவரம் நடைபெற்றது என்பதை அவர் கூற வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.