மணிப்பூரில் இயல்பு நிலை எப்போது திரும்பும் என பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே

 
Mallikarjuna Kharge Mallikarjuna Kharge

மணிப்பூரில் இயல்பு நிலை எப்போது திரும்பும் என பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். 

மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்தே இனத்தைச் சேர்ந்த கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வண்புணர்வு செய்யும் வீடியோ வெளியாகி, நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மழைக்கால கூட்டத்தொடரின் முதல் 3 நாட்களும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.  இந்த நிலையில், இன்று 4வது நாள் கூட்டத்தொடர் நடைபெற்றது. மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாநிலங்களவை மதியம் 12 மணி வரையும், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rajya Sabha

இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, மணிப்பூரில் இயல்பு நிலை எப்போது திரும்பும் என பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். மணிப்பூரில் நிலைமையை சரிசெய்ய மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறினார்.