கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தை பசு கோமியத்தால் சுத்தம் செய்த காங்கிரஸ் கட்சியினர்

 
Karnataka Karnataka
கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தை காங்கிரஸ் கட்சியினர் பசுமாட்டு சிறுநீர் கொண்டு சுத்தப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கர்நாடகாவில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில், 135 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது.  அம்மாநில முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும்  நேற்று முன்தினம் பதவி ஏற்றனர்.  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகன் உள்பட  8 அமைச்சர்களும் பதவியேற்றனர்.  அதனைத்தொடர்ந்து, நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 3 நாட்களுக்கு  கர்நாடக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக சித்தராமையா அறிவித்திருந்தார். இதையடுத்து காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்று  முதலாவது சட்டப்பேரவை  கூட்டம் இன்று கூடியது. சட்டப்பேரவை  தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 224 எம்.எல்.ஏ.க்களும் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  

இந்நிலையில், கர்நாடக சட்டசபை வளாகத்தை காங்கிரஸ் கட்சியினர் பசுமாட்டு சிறுநீர் கொண்டு சுத்தப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் நிறைந்த பாஜக அரசு முடிவுக்கு வந்ததையடுத்து சட்டசபை வளாகத்தை பசுமாட்டு சிறுநீர் கொண்டு சுத்தபடுத்தியதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.