கருப்பு உடையணிந்து பங்கேற்கும் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள்..

 
நாடாளுமன்றம்

காங்கிரஸ் முன்னாள்  தலைவர் ராகுல் காந்தி,  எம்.பி.,  பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் எம்.பிக்கள் இன்று நாடாளுமன்றத்திற்கும்  கருப்பு  உடை அணிந்து பங்கேற்க உள்ளனர்.  

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடகாவில் பிரச்சாரம் செய்த  ராகுல், மோடி என்னும் பெயர் குறித்து பேசியதை எதிர்த்து குஜராத் மாநிலம் சூரத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.   இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.  மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கி,  தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில் மறுநாளே ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை  செயலகம் அறிவித்தது. அவரது எம்.பி., பதவி பறிக்கப்படுவதாகவும்,  வயநாடு தொகுதி காலியாக இருப்பதாகவும் அறிவித்தது.  

ராகுல் காந்தி

இதற்கு  கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி  போராட்டத்தில் ஈடுபட்டது. அதன் ஒரு பகுதியாக  ராகுல் காந்திக்கு ஆதரவாக டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடம் உள்ள ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவை மீறியும் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ராகுல் காந்தியின் எம்.பி,  பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து அவரது சொந்த தொகுதியான வயநாட்டில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தீ பந்தம் ஏந்தி பேரணியாக சென்றனர்.   பெங்களூரு, பஞ்சாப், ஹரியானா,  குஜராத்,  ராஜஸ்தான்,  மத்திய பிரதேசம்,  ஜம்மு காஷ்மீர்,  தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் ஒருநாள் சத்தியாகிரகம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ்

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன் தொடர்ச்சியாக இன்று காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தில் கருப்பு உடை அணிந்து பங்கேற்கின்றன.   நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று கருப்பு உடையணிந்து  கலந்து கொள்கின்றனர்.  கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் கருத்து உடையுடன் பங்கேற்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இரவு முழுவதும் பேரவையிலேயே தங்கி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.