ஒவ்வொரு கட்சிக்கும் கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு - உதயநிதி விவகாரத்தில் காங்கிரஸ் கருத்து

 
kc venugobal

ஒவ்வொரு கட்சிக்கும் கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு எனவும், சமதர்ம சமுதாயம் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு எனவும் சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி பதில் அளித்துள்ளது. 

சனாதன ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றிய  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம் ஆகும். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் வேறு ஒன்றும் கிடையாது. சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். மத்திய அரசு கொண்டு வரும் விஸ்வகர்மா திட்டத்தை திமுக எதிர்க்கும்.” என்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் மீது டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Udhayanidhi

இந்த நிலையில், சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,  ஒவ்வொரு கட்சிக்கும் கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு. அனைவருடைய நம்பிக்கையையும் மதிக்கிறோம். சமதர்ம சமுதாயம் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. இவ்வாறு கூறினார்.