பந்திப்பூரை அதானிக்கு விற்றுவிடாதீர்கள் - பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் வைத்த காங்கிரஸ்..

 
modi

பந்திப்பூரை அதானிக்கு விற்றுவிட வேண்டாம் என பிரதமருக்கு கர்நாடக  மாநில  காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.  

பிரதமர் மோடி இன்று காலை கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயத்தை பார்வையிட்டார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பயணித்து  முதுமலை புலிகள் காப்பகத்திற்குச் சென்றார்.   இதனைக் குறிப்பிட்டு  கர்நாடகா காங்கிரஸ் கட்சி அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிரதமருக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளது. 

congress

அதில், “அன்புள்ள நரேந்திர மோடி, பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு திட்டத்தை காங்கிரஸ் கட்சி 1973ல் அறிமுகப்படுத்தியது. அந்தத் திட்டத்தின் காரணமாகவே நாட்டில் புலிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்தது. அதன் பலனைத் தான் நீங்கள் இன்று சஃபாரி சென்று அனுபவிக்கிறீர்கள். இந்நிலையில் நாங்கள் உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம். பந்திப்பூரை அதானிக்கு விற்றுவிடாதீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கர்நாடகாவில் சாம்ராஜ் நகரில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதியில்லாமல் 36 பேர் உயிரிழந்தனர்.  இதனையும் தனது  பதிவில்  சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ், “பந்திப்பூர் வந்த பிரதமர் நரேந்திர மோடி ஏன் சாம்ராஜ் நகருக்கு வரவில்லை. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்த குடும்பத்தாரை ஏன் சந்திக்கவில்லை. பிரதமருக்கு அங்கிருக்கும் எதிர்ப்பை சந்திப்பதில் பயமா?” என்று விமர்சித்திருக்கிறது.