நாங்கள் ராகுலை ஆதரிக்கவில்லை, அவர் மீது எடுக்கப்பட்ட ஜனநாயக விரோத நடவடிக்கையை நாங்கள் எதிர்த்தோம்.. மார்க்சிஸ்ட்

 
ராகுல் காந்தி

நாங்கள் ராகுல் காந்திக்கு ஆதரவளிப்பதாக நாங்கள் அறிவிக்கவில்லை, அவர் மீது எடுக்கப்பட்ட ஜனநாயக விரோத நடவடிக்கையை  நாங்கள் கடுமையாக எதிர்த்தோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்று தெரிவித்துள்ளது.

சூரத் நீதிமன்றம், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததையடுத்து, அவரது மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராகுல் காந்தி  தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து,  கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பினராயி விஜயன், இது சங்பரிவாரின் ஜனநாயகத்தின் தாக்குதல் என்றும், பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலின் உதாரணம் என்றும் குற்றம் சாட்டினார்.

பினராயி விஜயன்

இந்நிலையில், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்றவை எதிர்க்கட்சிகளை குறிவைக்க அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற மத்திய அமைப்புகளை பயன்படுத்துகின்றன, இது போன்ற ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிரான நிலைப்பாட்டை இடதுசாரி கட்சி எப்போதும் கடைப்பிடிக்கிறது.

கோவிந்தன்

ராகுல் காந்தி விஷயத்தில் அப்படி ஒன்று நடந்துள்ளது. நாங்கள் ராகுல் காந்திக்கு ஆதரவளிப்பதாக நாங்கள் அறிவிக்கவில்லை. அவர் மீது எடுக்கப்பட்ட ஜனநாயக விரோத நடவடிக்கையை  நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.