மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணன்
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்தவரும், மஹாராஷ்டிர ஆளுநருமான சி.பி ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) சார்பில் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை பாரதிய ஜனதா கட்சி (BJP) அறிவித்துள்ளது. துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஜார்க்கண்ட், தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன், தற்போது மகாராஷ்டிர கவர்னராக பதவி வகித்து வருகிறார். சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் என்ற சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். 1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராதாகிருஷ்ணன் 2023 பிப்ரவரி 18 முதல் 2024 ஜூலை 30 வரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும், 2024 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் (கூடுதல் பொறுப்பு) மற்றும் 2024 மார்ச் முதல் ஜூலை வரை தெலங்கானா ஆளுநராகவும் (கூடுதல் பொறுப்பு) பணியாற்றியுள்ளார். தற்போது, 2024 ஜூலை 31 முதல் மகாராஷ்டிர மாநில ஆளுநராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்தவரும், மஹாராஷ்டிர ஆளுநருமான சி.பி ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.முன்னதாக பிரதமர் மோடி, “என்டிஏ கூட்டணி சார்பில் துணை குடியரசுத்தலைவர் வேட்பாளராக சிபி.ராதாகிருஷ்ணனை பரிந்துரைத்ததில் மகிழ்ச்சி. தான் வகித்த பல்வேறு பதவிகளின் போது எப்போதும் சமூக சேவை, விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் என கவனம் செலுத்தினார். பொது வாழ்வில் நீண்ட ஆண்டுகள் அர்ப்பணிப்பு, பணிவு, அறிவுத்திறன் ஆகியவற்றால் தன்னை வேறுபடுத்தி காட்டியுள்ளார். சி.பி.ராதாகிருஷ்ணனின் மேன்மையான பணிகள் தொடர அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார்.


