சொத்துக்காக தாயின் முகத்தில் தலையணையை அழுத்தி கொன்ற மகள்

 
s s

தெலுங்கானா மாநிலம் ஜனகாம் மாவட்டத்தில் சொத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் கணவருடன் இணைந்து தாயின் முகத்தில் தலையணையால் அழுத்தி, கழுத்தை நெரித்து கொன்று, எதுவும் தெரியாதபடி நாடகமாட்டிய மகளை போலீசார் கைது செய்தனர்.

சொத்துக்காக தாயைக் கொன்ற மகள்.


தெலங்கானா மாநிலம் ஜனகாம் மாவட்டம் பாலகுர்த்தி மண்டலம், பெத்ததண்டா கிராமத்தைச் சேர்ந்த பாதாவத் லட்சுமி (45) கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இந்த நிலையில் விவசாயம், கூலி வேலைகளைச் செய்துக்கொண்டே தனியாக ஒரே மகள் சங்கீதாவை வளர்த்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சாதாப்புரம் கிராமத்தைச் சேர்ந்த பூக்கி வீரன்னாவை என்பவரை சங்கீதா காதலித்தார். அவரையே திருமணம் செய்ய விரும்புவதாக தாயிடம் கூறியதால் ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளாத லட்சுமி, பின்னர் மகளின் இஷ்டத்தை மறுக்க முடியாததால், தன்னிடம் இருந்த மூன்று ஏக்கர் நிலத்தில் இரண்டு ஏக்கர்களை விற்று தங்கம், வரதட்சணை என கொடுத்து மகளுக்கு  திருமணம் செய்து வைத்தார். பின்னர் தனது கணவரின் சகோதரிகளுக்கும் அரை ஏக்கர் நிலத்தை எழுதி கொடுத்தார். மீதமுள்ள அரை ஏக்கர் நிலத்தை மட்டும் தனது பெயரில் வைத்துக்கொண்டு விவசாயம் செய்துக்கொண்டே வாழ்க்கை நடத்தி வந்தார். ஆனால், மீதமுள்ள அரை ஏக்கர் நிலமும் தனக்கே  கொடுக்க வேண்டும் என்று சில மாதங்களாக மகள், மருமகன் லட்சுமியை கேட்டு வந்தனர். 

லட்சுமி பெயரில் உள்ள நிலத்தை தமது பெயரில் எழுதி கொடுக்க வேண்டும் என்று மகள் சங்கீதா, மருமகன் வீரன்னா பலமுறை சண்டையிட்டு வந்தனர். ஆனால் அவர் ஏற்று கொள்ளவில்லை மேலும் "நான் உயிருடன் இருக்கும் வரை நிலம் கொடுக்க முடியாது நான் இறந்த பிறகு உங்களுக்கே சேரும்" என்று லட்சுமி கூறினார் .  இதனால் தாய்  லட்சுமி உயிருடன் இருக்கும் வரைக்கும் தங்களுக்கு அந்த சொத்து வராது என கருதி தாயைக் கொல்ல சங்கீதா திட்டமிட்டார். இதற்காக காரில் கணவருடன் இணைந்து தாய் லட்சுமி வீட்டுக்கு வந்தார் . இந்தநிலையில் அன்று மறுநாள் சந்தேகத்திற்குரிய வகையில் லட்சுமி இறந்தார். காலை லட்சுமியை கூலி வேலைக்கு அழைக்க சென்ற அப்பகுதி பெண்கள், லட்சுமி வீட்டுக்கு சென்றனர். "தனது தாய் தூக்கத்திலேயே இறந்துவிட்டார்" என்று அவர் சடலத்தில் விழுந்து சங்கீதா அழுது கொண்டே நாடகம் ஆடினார். ஆனால், லட்சுமி கழுத்தில் காயங்களுடன் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்திருக்கிறார் என்று கண்டறிந்த பெண்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து தங்களது பாணியில் விசாரித்தபோது நள்ளிரவு தூங்கும்போது லட்சுமியின் கால்களை மருமகன் வீரன்னா பிடித்துக்கொண்டு, சங்கீதா முகத்தில் தலையணையால் அழுத்தி , பின்னர் கழுத்தை நெரித்து மூச்சுத்திணறச் செய்து கொன்றதாக ஒப்புக்கொண்டனர். வழக்கு பதிவு செய்த போலீசார் மகள் சங்கீதாவையும் அவருடைய கணவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.