"அந்த கேள்வியை எடுத்தது யார்?; 72 மணி நேரம் தான் டைம்" - சிபிஎஸ்இ-க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

 
சிபிஎஸ்இ

மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சிபிஎஸ்இ கல்வி வாரியம் செயல்படுகிறது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில், அதன் கல்விக்கொள்கையில் இயங்குகிறது. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தததிலிருந்தே பாடத்திட்டங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்துகள், பிற்போக்குத்தனமான பழமைவாத கருத்துகள் சேர்க்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கமாக பாடத்திட்டத்தில் தான் தேவையற்ற கருத்துகளை இணைத்து பெரும் சர்ச்சைகளுக்கு வித்திடும். சமீபத்தில் வினாத்தாளும் சர்ச்சையானது.

சிபிஎஸ்இ

சில நாட்களுக்கு முன்பு சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில தேர்வு நடைபெற்றது. அந்த வினாத்தாளில் அமைந்துள்ள ஒரு கேள்வி தான் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. அந்தக் கேள்வியில் "இப்போதெல்லாம் மனைவிமார்கள் குழந்தைகளை சரியாக வளர்ப்பதில்லை. பெண் சுதந்திரத்தால் குடும்பத்தில் அவர்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ளது. இதனால் பெற்றோர் என்ற கட்டமைப்பை அவர்கள் அழிக்கிறார்கள். கணவர்களுக்கு கீழ்படியாத காரணத்தால் அவர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் ஒழுங்கீனமாக வளர்கிறது” என குறிப்பிடப்பட்டிருந்தது.

Image

தேசிய அளவில் இந்தக் கேள்வி பூதாகரமாக வெடித்தது. பல்வேறு பழமைவாதங்களை ஒழித்துக்கட்டி நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நவீன யுகத்தில், மீண்டும் கற்கால சிந்தனையை பாஜக அரசு ஊக்குவிப்பதாக பல கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். இதற்குப் பின் சிபிஎஸ்இ அந்தக் கேள்வியை நீக்கியது. அதற்கு விடையளித்த மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவித்தது. இச்சூழலில் இதுதொடர்பாக இன்னும் 72 மணி நேரத்தில் சிபிஎஸ்இ விளக்கமளிக்க வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. 

CBSE Class 10 results to be released soon: Secretary Anurag Tripathi -  Education Today News

டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி சிபிஎஸ்இக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "கேள்வியில் பெண்கள் குறித்து பிற்போக்குக் கருத்துக்கள் இருக்கின்றன. குழந்தைகளிடையே ஒழுக்கமின்மை, கீழ்படியாமை அதிகரிக்க பெண்களுக்கு அதிகமான சுதந்திரம், சமத்துவம் கொடுக்கப்பட்டதே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கு எதிராகவும் பாலியல் வேறுபாட்டையும், பாலியல் உணர்ச்சியை தூண்டுவது போலவும் கேள்வி அமைந்துள்ளது.

Delhi Commission for Women to shut down helpline because of non-payment of  salaries

இந்த வினாத்தாளை தயாரித்தவர்கள் குறித்த விவரங்கள், இந்த கருத்துக்களை எழுதியவர் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். எதற்காக இந்த கருத்துக்கள் வினாத்தாளில் இடம் பெற்றன, காரணம் என்ன என்பதையும், பாலின வேறுபாட்டை பரப்பும் இந்த வினாத்தாளை சிபிஎஸ்இ ஆய்வு செய்ததா வல்லுநர்கள் பரிசோதித்தார்களா என்பதை விளக்க வேண்டும். இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்று 72 மணி நேரத்துக்குள் அனைத்து கேள்விகளுக்கும் விளக்கத்தை சிபிஎஸ்இ வாரியம் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.