மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் - மக்களவையில் விவாதம் தொடங்கியது!

 
Parliament

மக்களவையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது.

மணிப்பூரில் தொடரும் வன்முறை தொர்பாக நாடாளுமன்றத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடங்கின. மத்திய அரசுக்கு எதிரான இந்தியா கூட்டணி சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ் காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் கடந்த 26 ஆம் தேதி வழங்கிய நிலையில் அதன் மீதான விவாதம் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுதினம் பதிலளிக்க உள்ளார். அதன் பின்னர் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதனிடையே இன்று  மக்களவை தொடங்கிய 2 நிமிடங்களுக்குள், எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால், பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை தொடங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.   

Om Birla

இதனிடையே 12 மணிக்கு அவை மீண்டும் தொடங்கியதும் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி விவாதத்தை தொடங்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கௌரவ் கோகோய் எம்.பி. விவாதத்தை தொடங்கி பேசி வருகிறார். அப்போது பேசிய அவர், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஏன் செல்லவில்லை? என கேள்வி எழுப்பினார். மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்ற இரு அவைகளிலும் பேசவில்லை என கூறினார்.