மூத்த குடிமக்களிடம் வீட்டிற்கே சென்று வாக்குகளை பெறும் தேர்தல் அதிகாரிகள்
தெலங்கானா சட்டமன்றத் பொதுத்தேர்தலுக்கான நேரம் நெருங்கி வரும் நிலையில் முதல் முறையாக மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று தேர்தல் அதிகாரிகள் வாக்குகளை பெற்றுவருகின்றனர்.
தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கு இம்மாதம் 30ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 35 ஆயிரம் வாக்கு மையங்களை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. இருப்பினும் அதற்கு முன்னதாக வீடுகளில் இருந்தே முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கப்பட்டு வருகிறது. தெலுங்கானாவில் முதல்முறையாக மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக முன்கூட்டியே வீட்டில் இருந்தே வாக்களிக்க மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட மொத்தம் 27069 விண்ணப்பங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது. இதில் மூத்த குடிமக்களிடமிருந்து மொத்தம் 17,105 விண்ணப்பங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதில் 6,226 பேர் வாக்களித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மொத்தம் 9,964 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதில் 2,884 பேர் வாக்களித்துள்ளனர். மொத்தம் இதுவரை 9110 பேர் தங்களது வாக்குகளை வீட்டில் இருந்தபடியே செலுத்தி உள்ளனர். தேர்தல் நடைபெறும் 30ம் தேதிக்கு முன் மூன்று நாட்கள் வரை வீட்டில் இருந்து வாக்கு சேகரிப்பு நடைபெறம் என தேர்தல் ஆணையம் கூறியதால் நாளைக்குள் மீதமுள்ளவர்களிடம் வாக்குகளை வீட்டிற்கே சென்று சேகரிக்க அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர்.