விரலுக்கு பதில் நாக்கில் அறுவை சிகிச்சை - மருத்துவர் சஸ்பெண்ட்
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுமிக்கு, விரலுக்கு பதில் தவறுதலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் நான்கு வயது சிறுமி அவரது கையில் இருந்த ஆறாவது விரல் அகற்றப்படுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில மணி நேரம் கழித்து சிறுமிக்கு அறுவை சிகிச்சை முடிந்து அவர் வெளியே அழைத்துவரப்பட்டார். அப்போது அவரது வாய் பகுதியில் பஞ்சு ஒட்டப்பட்டு இருந்தது. இதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கேட்டனர். அப்போதுதான் சிறுமிக்கு விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது.

இந்த சம்பவ தொடர்பாக கேரள மருத்துவ கல்லூரி இயக்குனரிடம் இருந்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ்க்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கேரளா சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் சம்பந்தப்பட்ட மருத்துவர் பீஜான் ஜான்சனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இத்துடன் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய குற்றத்திற்காக சட்டப்பிரிவு 336 மற்றும் 337 இன் கீழ் மருத்துவர் பிஜான் ஜான்சன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


