”எதிரியின் இறப்பை கொண்டாடாதீர்கள்..” பிபின் ராவத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பாக். முன்னாள் ராணுவ அதிகாரி...

 
பிபின் ராவத்

மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாகிஸ்தான்  முன்னாள் ராணுவ அதிகாரி அடில் ஃபரூக் ராஜா, எதிரியின் இறப்பை கொண்டாடாதீர்கள்..என கேட்டுக்கொண்டுள்ளார்...

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து, வெலிங்க்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு  இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் , அவரது மனைவி மதுலிகா ராவத்  மற்றும்  ராணுவ உயர் அதிகாரிகள் 12 பேர் உயர் ரட ராணுவ  ஹெலிகாப்டரில் பயணித்தனர். அப்போது குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்த  ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.   இந்த கோர விபத்தில் இந்திய முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ உயரதிகாரிகள்  என 13  பேர் உயிரிழந்தனர்.

பிபின் ராவத்

13 பேரது உடல்களும் நேற்று மாலை தனி விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவர்களுக்கு இறுதி மரியாதை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள   முப்படை தளபதி பிபின் ராவத்தின் மறைவுக்கு , பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் , ராணுவ அதிகாரிகள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  அந்தவகையில், இந்திய ராணுவ அதிகாரி ஆர்.எஸ்.பதானியா, பிபின் ராவத்தின் படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவித்திருந்தார்.

அதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி அடில் ஃபரூக் ராஜா, “ எனது இதயப்பூர்வமான இரங்கலை ஏற்கவும்” என்று பதிலளித்திருந்தார்.  அதற்கு ரிப்ளை செய்திருந்த பதானியா, “நன்றி அடில்.., ஒரு வீரரிடம் இருந்து இதைத்தான் எதிர்ப்பார்க்கிறோம்... சல்யூட் ..” என தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் ராணுவ அதிகாரி

இதற்கு மீண்டும் பதிலளித்த  அடில் ராஜா, “ நிச்சயமாக..  ஒரு வீரராக நான் செய்யும் கண்ணியமான செயல் இது.  இழப்பில் வாடும் உங்களுக்காக மீண்டும் வருந்துகிறேன்..  எதிரி இறந்துவிட்டார் என இறப்பை கொண்டாடாதீர்கள். ஒரு நாள் நமது நண்பர்களும் உயிரிழப்பார்.” என தெரிவித்திருந்தார்.

பின்னர் அதற்கு,  “ நன்றி அடில்.. போட்களத்தில் நாம் எதிரிகள்.. இனி நண்பர்களாக இருக்க முடியாவிட்டால் ஒருவருக்கொருவர் நாகரீகமாக இருப்போம்” என பதானியா பதிலளித்தார்.  இணையத்தில் வைரலாகி வரும் இருநாட்டு ராணுவ அதிகாரிகளின் இந்த உரையாடல் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ அதிகாரி