உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்பு

 
DY chandrachud DY chandrachud

உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்றுக்கொண்டார். 

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பணியாற்றி வந்தார். இவரது பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து தலைமை நீதிபதி யு.யு.லலித் தனக்கு அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை கடந்த மாதம் 11-ந்தேதி மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். இதனை தொடர்ந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, கடந்த மாதம் 17-ந்தேதி டி.ஒய்.சந்திரசூட்டை தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டார். இந்நிலையில், புதிய நீதிபதி பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. 

இதில், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்றார். புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர் 2024-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி வரை பொறுப்பு வகிப்பார்.  1959-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி பிறந்த சந்திரசூட், கடந்த 2016-ம் ஆண்டு மே 13-ந்தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றார். புதிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் தந்தை ஒய்.வி.சந்திரசூட்டும் இந்திய தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் ஆவார். மிக நீண்டகாலம் இப்பதவியை அலங்கரித்தவர் என்ற பெருமை பெற்ற அவர், 1978-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி முதல், 1985-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி வரை இந்த உச்ச பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.