பாகிஸ்தானியர்கள் வெளியேறாவிட்டால் சுட்டு கொல்லப்படுவார்கள் - ஏக்நாத் ஷிண்டே பரபரப்பு பேச்சு!
Apr 29, 2025, 13:39 IST1745914187967
பாகிஸ்தானியர்கள் மகாராஷ்டிராவில் இருந்து வெளியேறாவிட்டால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேசியுள்ளார்.
கடந்த 21ம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட கெடு முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானியர்கள் மகாராஷ்டிராவில் இருந்து வெளியேறாவிட்டால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேசியுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த 107 பேர் மகாராஷ்டிராவில் இருப்பது குறித்து ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானியர்கள் எந்த பொந்துக்குள் ஒளிந்திருந்தாலும், காவல் துறை அவர்களை கண்டுபிடித்து அங்கேயே கொல்லும். பாகிஸ்தானியர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.


