#BREAKING NEWS : பிபிசி-க்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

 
BBC

இந்தியாவில் முதலீடு செய்ய முறையாக அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டில் பிபிசி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது

பிபிசி நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் குறித்த ஆவணப்படத்தை 2  பாகங்களாக வெளியிட்டது.  இந்த ஆவணப்படத்தில் குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடியின் தொடர்பு  குறித்தான குற்றச்சாட்டுகளும் இடம்பெற்றிருந்தது. இதனால் இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடைவிதித்தது.  அத்துடன்  இந்த ஆவணப்படம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, அவை விசாரணையில் இருந்து  வருகின்றன. இந்நிலையில், பிபிசி நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் பிப். 14ம் தேதி  வருமான வரித்துறை   அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அலுவலகங்களில் இருந்த கம்ப்யூட்டர்கள், செல்போன்களை  ஆய்வு செய்த  வருமான வரித்துறை அதிகாரிகள்,  சர்வதேச வரி விவகாரங்கள் தொடர்பாக சோதனைகள் நடத்தப்பட்டதாக விளக்கம் அளித்தனர். இரவு பகலாக நீடித்த சோதனையில்  ஊழியர்களின் செல்போன்கள் மற்றும் லேப்டாப்களையும் பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், பிபிசி நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய முறையாக அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டில் பிபிசி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பிபிசி அலுவலகத்தில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதையே பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து இருந்த நிலையில், பிபிசி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.