தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை.. இன்றும் தொடர்கிறது மருத்துவர்கள் போராட்டம்..

 
doctors

மேற்குவங்கம் மருத்துவ மாணவி படுகொலை சம்பவம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், பணி புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  

மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்துவந்த பெண் பயிற்சி மருத்துவர், கல்லூரி கருத்தரங்கு அறையில் கடந்த 9ம் தேதி  சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.  ஆக.8 ம் தேதி  இரவு பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்  சஞ்சய் ராய் என்பவரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் இந்த சம்பவத்தைக் கண்டித்தும்,  பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டும், சமரசமற்ற விசாரணை நடத்தக்கோரியும் மாணவர்களும் , மருத்துவர்களும்  நாடு முழுவதும்  நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை..  இன்றும் தொடர்கிறது மருத்துவர்கள் போராட்டம்.. 
 
இதனையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  சுமார் 2  மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.  அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குடியுரிமை டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் அவிரல் மாத்தூர், “ மத்திய அமைச்சர் நட்டா உடன்  பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் கோரிக்கை குறித்து அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் நடந்த சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன்  பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.  மத்திய சுகாதாரப் பாதுகாப்புச் சட்டம் வகுக்கப்பட வேண்டும்; மருத்துவர்களுக்கு வெறும் வாக்குறுதிகள் வேண்டாம்; அமைச்சகம் சில கோரிக்கைகளை ஏற்கத் தயங்கினர்;  இதனை தொடர்ந்து அனைத்து மருத்துவமனைகளும் இப்போது பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவோம். மருத்துவர்களின் வேலை நிறுத்தம் தொடரும், ஏற்கனவே அறிவித்த படி தேர்வு செய்யப்பட்ட சேவைகள் நாளையும்( இன்று -ஆக.13) நிறுத்தப்படும்”என்று தெரிவித்தார்.