‘சரியாக படிப்பு ஏறவில்லை’- 2 குழந்தைகளையும் வாளி நீரில் அமுக்கி கொன்ற தந்தை

போட்டி நிறைந்த உலகில் குழந்தைகள் சிறந்து விளங்க முடியாது என்று இரண்டு குழந்தைகளின் கை, கால்களை கட்டி வாளி தண்ணீரில் தலையை அமுக்கி கொன்று தானும் தற்கொலைக் செய்து கொண்ட தந்தையின் செயல் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தடேபள்ளிகுடத்தை சேர்ந்த வனப்பள்ளி சந்திரகிஷோர், காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள வக்காலப்புடியில் உள்ள ஓஎன்ஜிசி அலுவலகத்தில் உதவி கணக்காளராகப் பணிபுரிகிறார். இவர் நகரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட்டில் மனைவி தனுஜாவும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஜோஷில் (7), யுகேஜி படிக்கும் நிகில் (6) என்ற குழந்தைகளுடன் வசித்து வந்தனர். பிள்ளைகள் நன்றாகப் படிக்காததால் சமீபத்தில் பள்ளிகளை மாற்றி சேர்த்து படிக்க வைத்தார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகையையொட்டி, சந்திரகிஷோர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தனது அலுவலகத்தில் கொண்டாட அழைத்துச் சென்றார். பின்னர் அங்கு தனது மனைவியை அங்கேயே சிறிது நேரம் இருக்கும்படி கூறிவிட்டு பிள்ளைகளுக்கு பள்ளி சீருடைக்கு அளவு கொடுக்க டைலரிடம் அழைத்துச் செல்வதாகவும், பத்து நிமிடங்களில் திரும்பி வருவதாக கூறி பிள்ளைகளை அழைத்து சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் கணவர் வராததாலும் போன் செய்துள்ளார். ஆனால் அவர் பதிலளிக்காததால், தனுஜா தனது சக ஊழியர்களுடன் வீட்டிற்கு சென்றார். வீட்டில் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது சந்திரகிஷோர் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்து கிடப்பதைக் கண்டார்.
உடனடியாக கதவுகளை வலுக்கட்டாயமாக உடைத்து உள்ளே சென்ற பார்த்தபோது, இரண்டு குழந்தைகளும் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், தண்ணீர் நிறைந்த வாளிகளில் தலைகள் மூழ்கியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தற்போதைய போட்டி நிறைந்த உலகில் தனது குழந்தைகள் போட்டியிட முடியாது அவர்களுக்கு சரியாக படிப்பு ஏறவில்லை என்றும், அவர்களுக்கு எதிர்காலம் இல்லை என்றும், தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்வதாகவும் சந்திரகிஷோர் தனது தற்கொலைக் கடிதத்தில் எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அந்த கடிதம் பறிமுதல் செய்தனர். சந்திரகிஷோர் சகோதரர் தனது தம்பிக்கு எந்த நிதிப் பிரச்சினையும் இல்லை, சொத்துக்கள் உள்ளன, தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவர் கோழை அல்ல என்று புகார் கூறினார். இதுகுறித்து சர்பவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெடிராஜு வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.