வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ.க்கு பளார் என அறைவிட்ட பெண் - வைரல் வீடியோ

 
Haryana

அரியானாவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ.வை ஒரு பெண் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.   வளிமண்டல மேல்திசை காற்றில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக வடமாநிலங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், இதனால் இதுவரை சுமார் 90 பேர் வரை பலியாகியுள்ளனர். இதேபோல் பஞ்சாப் மற்றும் அரியானாவிலும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 


அரியானாவின் சிங்கின் குலா தொகுதியில் உள்ள பாட்டியா கிராமத்தில் காகர் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், ஜனநாயக ஜனதா கட்சி எம்.எல்.ஏ.ஈஸ்வர் சிங் நேற்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றார். எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள் தடுப்பணை உடைவதற்கு முன் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த ஒரு பென், இப்போது ஏன் வந்தாய்?" என கூறி எம்.எல்.ஏ.வின் கன்னத்தில் பளார் என அறைவிட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் எம்.எல்.ஏவை அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனிடையே தன்னை தாக்கிய பெண் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என அந்த எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டுள்ளார்.