டிக்கெட் முன்பதிவில் மோசடி.. 2.5 கோடி போலி பயனர் ஐடிக்கள் நீக்கம் - இந்திய ரயில்வே அதிரடி..

 
IRCTC Train Ticket Booking IRCTC Train Ticket Booking

ரயில் டிக்கெட் முன்பதிவுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த 2.5 கோடி பயனர் ஐடி-க்களை ரயில்வே நிர்வாகம் முடக்கியுள்ளது.. 

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இந்திய ரயில்வே இருந்து வருகிறது. நாள்தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகிறனர்.  மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளி மாநிலங்களுக்கு செல்வது என்றாலும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ரயில் பயணம் தான் ஏதுவாக உள்ளது. இந்த ரயில்களில் பயணம் மேற்கொள்ள டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது அவசியம். அதிலும் பண்டிகை காலங்களில் டிக்கெட்டுகளை  முன்பதிவு செய்துகொள்வது  இடம் கிடைக்குமா, கிடைக்காதா? என்கிற கடைசி நேர பதற்றத்தை குறைக்கும்.  பொதுவாகவே பண்டிகை காலங்களில் 60 முதல் 120 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும். அப்படி டிக்கெட் முன்பதிவு செய்த சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடும். இருப்பினும் பொதுமக்கள் டிக்கெட்டுகள் கிடைக்காமல் அவதிக்கு ஆளாகி வந்தனர். 

IRCTC Train Ticket Booking

இதனையடுத்து ரயில்வே நிர்வாகம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் யூசர் ஐடிகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில்  ரயில்களில் டிக்கெட் முன்பதிவுக்காக தொடங்கப்பட்ட 2.5 கோடி போலி கணக்குகளை ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது.  ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பே தொடங்கினாலும் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.  போலி கணக்குகளை தொடங்கி முன்பதிவு சில நிமிடங்களிலேயே பல லட்சம் டிக்கெட்டுகளை சில கும்பல் முன்பதிவு செய்துவிடுவதால் பயணிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.  ஜனவரி முதல் மே மாதம் வரையிலான 5 மாதங்களில் புக்கிங் தொடங்கிய 5 நிமிடங்களில் 2.9 லட்சம் பி.என்.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து ரயில்வே துறை நடத்திய தீவிர ஆய்வில் சந்தேகப்படும்படியான 2.5கோடி போலி யூசர் ஐடிக்களை கண்டுபிடித்து நீக்கியுள்ளது. டிக்கெட் முன்பதிவில் முறைகேட்டை தடுக்க மேலும் 20 லட்சம் யூசர் ஐடிக்களை மறுமதிப்பீட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.