டெல்லி முதல்வர் மீது தாக்குதல் : குஜராத் மாநிலத்தை சேர்ந்த நபர் கைது.. காரணம் என்ன??

டெல்லி முதலமைச்சரை கன்னத்தில் அறைந்த நபர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில், பொதுமக்களின் குறைகளை கேட்பதற்காக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், தீடிரென முதலமைச்சர் ரேகா குப்தாவை தாக்கினார். முதலமைச்சரின் முடியை பிடித்து இழுத்து அவரது கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் முதலமைச்சர் மீது தாக்குதல் நடத்திய நபரை பிடித்து டெல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடனடியாக அந்த நபரை கைது செய்த டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதலமைச்சரை தாக்கிய அந்த நபர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் சக்ரியா என்பதும், அவருடைய வயது 41 என்கிற விவரமும் தெரியவந்துள்ளது.
ராஜேஷின் உறவினர் ஒருவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிக்க உதவிகோரி மனு அளிக்க வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அவர் குறித்தான மேலும் விவரங்களை டெல்லி போலீசார், குஜராத் மாநில காவல்துறையிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தாக்குதல் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அதேநேரம், ராஜேஷ் விலங்குகள் நல ஆர்வலர் என்றும், தெருநாய்கள் சிறைபிடிப்பு வழக்கு தொடர்பாக டெல்லி செல்வதாக கூறிவிட்டு சென்றதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் டெல்லி முதல்வரை சென்று சந்திப்பார் என்று தங்களுக்கு தெரியாது என்றும், ராஜேஷ் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கூறியுள்ளார்.


