திருப்பதி லட்டுவில் குட்கா! பக்தர் அதிர்ச்சி
திருப்பதி லட்டு பிரசாத தயார் செய்யப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட சர்ச்சை முடிவதற்குள் சாமி தரிசனத்திற்கு பிறகு வீட்டிற்கு வாங்கி சென்ற லட்டில் குட்கா பாக்கெட் இருந்ததை கண்டு தெலங்கானா பக்தர் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் என்றால் பக்தர்கள் அனைவரும் மிகவும் பக்தியுடன் விரும்பி சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் திருப்பதியில் லட்டு தயார் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆய்வக முடிவில் தெரிய வந்ததாக தேவஸ்தானம் அறிவித்தது. இந்த சர்ச்சை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் உலகம் முழுவதும் உள்ள இந்து பக்தர்கள் மனதை புண்படும் விதமாக செய்துள்ளது. இதற்காக கோயிலுக்குள் தோஷ நிவாரண சாந்தி யாகம் நடத்தப்பட்டது. இந்நிலையில்
தெலங்கானா மாநிலம் கம்மம் ரூரல் மண்டலம் கொல்லகுடேம் பகுதியைச் சேர்ந்த பத்மா என்ற பக்தர் கடந்த 19ம் தேதி தனது உறவினர்களுடன் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு லட்டு பிரசாதத்தை வாங்கி கொண்டு ஊருக்கு சென்றார்.
வீட்டிற்கு சென்றதும் உறவினர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக லட்டு உடைத்து பார்த்தது பிரசாதத்தில் குட்கா பாக்கெட் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பத்மா கூறுகையில் ஒவ்வொரு மாதமும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக திருப்பதி செல்வது வழக்கம். அவ்வாறு இந்த மாதம் 19ஆம் தேதி திருப்பதிக்கு சென்றேன். 20 ம். தேதி சாமி தரிசனம் செய்த பின்னர் வீட்டிற்கு வந்து குளித்து பூஜை அறையில் வைத்த லட்டு பிரசாதத்தை பிரித்து உறவினர்களுக்கு வழங்குவதற்காக உடைத்து பார்க்கும் போது அதில் குட்கா பாக்கெட் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். புனிதமான ஏழுமலையான் கோவிலில் இவ்வாறு இருப்பது கவலை அளிக்கிறது.
இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து பத்மாவின் மகன் பவன்குமார் கூறுகையில் என்னுடைய தாயார் ஒவ்வொரு மாதமும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு கடந்த 19ஆம் தேதி சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து உறவினர்களுக்கு வழங்குவதற்காக லட்டு உடைத்து பார்த்தபோது அதில் குட்கா பாக்கெட் இருப்பது தெரிய வந்தது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் ஆந்திர மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறக்கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.