ஹரியானா தேர்தல் : மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி..
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்கு எண்ணிக்கை இன்று (அக்.8) காலை 8 மணிக்கு தொடங்கிய நடைபெற்று வருகிறது. ஹரியானாவில் 3வது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜக இருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை ஆரம்ப நிலவரத்தின்படி காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தது. இதனையொட்டி காட்சிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். காலை நிலவரப்படி, காங்கிரஸ் கூட்டணி 60 தொகுதிகளிலும், பாஜக 27 தொகுதிகளிலும், மற்றவை 3 இடங்களிலும் முன்னிலை வகித்தன. ஆனால் நேரம் செல்ல செல்ல ஹரியான தேர்தல் நிலவரம் தலைகீழாக மாறியது. தற்போதைய நிலவரப்படி பாஜக 49 தொகுதிகளிலும், காங்கிரஸ் 35 தொகுதிகளிலும், 6 இடங்களில் பிற கட்சிகளும் முன்னிலை வகிக்கின்றன. 46-ஐ கடந்து முன்னிலை பெறும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு என்ற நிலையில் பாஜக மூன்றாவது முறையாக ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஹரியானாவில் ஜூலான் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில் முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வினேஷ் போகத் தோற்கடித்துள்ளார். ஜூலானா தொகுதியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


