மாணவிகளின் குளியலறையில் ரகசிய கேமரா- வீடியோக்களை பல ஆயிரத்துக்கு விற்ற மாணவர்கள்
ஆந்திராவில் குட்லவல்லேறு பொறியியல் கல்லூரியில் மாணவிகள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்த மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா மண்டலம் குட்லவல்லேரு பொறியியல் கல்லூரியில் மாணவிகள் விடுதியில் இருக்கும் குளியலறையில் ரகசிய கேமிராவை வைத்திருந்ததை மாணவிகள் கண்டுபிடித்தனர். இதை பார்த்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிர்வாகம் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் கேமரா வைத்தவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும் என மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது போன்ற கொடூர சம்பவங்கள் குறித்து நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வியாழக்கிழமை மாலை பல்கலைக்கழக வளாகத்தில் நீதி வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். ஆனால் இதை ரகசியமாக வைத்திருந்த பல்கலைக்கழக நிர்வாகம், வெளியே தெரியாத வகையில் பல்கலைக்கழக வாயில்களை மூடியது.
இந்நிலையில் செல்போன் டார்ச் லைட்களை ஒளிரச் செய்தவாறு மாணவர்கள் எங்களுக்கு நீதி வேண்டும் என நள்ளிரவில் கோஷம் எழுப்பினர். இதற்கிடையே குளியலறையில் கேமரா வைத்து வீடியோக்களை விற்றதற்காக பிடெக் இறுதியாண்டு மாணவரான விஜயகுமாரை பிடித்து தாக்க முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கல்லூரி விடுதிக்கு வந்தனர். பிடெக் இறுதியாண்டு மாணவர் விஜயகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி அவரிடம் இருந்த லேப்டாப் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதிகாலை 3.30 மணி வரை இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. விஜயகுமாருக்கு இறுதியாண்டு படிக்கும் மற்றொரு மாணவனும் கேமராக்கள் பொருத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விஜயகுமார் லேப்டாப்பில் இருந்து 300 வீடியோக்களை போலீசார் கையகப்படுத்தி உள்ளனர்.