"மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயம் இல்லை"- தர்மேந்திர பிரதான்
தமிழ்நாடு அரசு புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குத் தரவேண்டிய ரூ.2152 கோடியை விடுவிக்க முடியும் என்று இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கையை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடியின் புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என விளக்கம் அளித்துள்ள அவர், தமிழக மாணவர்கள் பல்வேறு மொழிகளை கற்க வாய்ப்பு கொடுப்பதில் என்ன தவறு உள்ளது? என்றும் கேள்வி எழுப்பினார். மும்மொழி கொள்கையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் வேறு எந்த ஒரு இந்திய மொழியையும் தமிழக மாணவர்கள் கற்கலாம் என்றும்
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தி மட்டுமல்ல வேறு எந்த மொழியையும் மூன்றாவதாக கற்குமாறு மாணவர்களிடம் திணிக்கவில்லை என்றும் புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை தவறாக எடுத்துரைத்து தமிழ்நாட்டில் சிலர் அரசியல் செய்கிறார்கள் என்றும் கூறியுள்ள ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.


