பா.ஜ.க. கூட்டணியில் இணைந்த இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா.. பீகார் அரசியலில் புதிய திருப்பம்
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி இணைந்தது.
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி அரசாங்கம் நடைபெற்று வருகிறது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவையைில் எஸ்.சி/எஸ்.டி. நல துறை அமைச்சராக இருந்த இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் எம்.எல்.ஏ. சந்தோஷ் குமார் சுமன் கடந்த வாரம் யாரும் எதிர்பாராத வகையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் தனது கட்சியை (இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா) இணைக்க அழுத்தம் கொடுக்கப்படுவதால் கட்சியை பாதுகாக்கும் நோக்கில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சந்தோஷ் குமார் சுமன் தெரிவித்தார்.
இந்நிலையில்,கடந்த சில தினங்களுக்கு முன் நிதிஷ் குமார் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி திரும்ப பெற்றது. இது தொடர்பாக அந்த கட்சியின் தேசிய தலைவர் சந்தோஷ் குமார் சுமன் கூறுகையில், நிதிஷ் குமார் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதற்கான கடிதத்தை வழங்க மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகரிடம் வழங்கப்பட்டது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அழைத்தால் அழைப்பை பரிசீலனை செய்ய தயாராக இருக்கிறேன். மூன்றாவது முன்னணியை அமைப்பதற்கான விருப்பத்தையும் நாங்கள் திறந்து வைத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் நிறுவனர் ஜிதன் ராம் மாஞ்சி மற்றும் அந்த கட்சியின் தேசிய தலைவர் சந்தோஷ் குமார் சுமன் ஆகியோர் நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு சந்தோஷ் குமார் சுமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொள்கையளவில் இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இருக்கிறோம். கூட்டணி பங்காளியாக தொகுதி பங்கீடு மற்றும் பிற விஷயங்களை பற்றி பிறகு விவாதிப்போம் என்று தெரிவித்தார்.