புதுச்சேரியில் 2 பள்ளிகளுக்கு ஜூன் 17ம் தேதி வரை விடுமுறை!
புதுச்சேரியில் விஷவாயுத்தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுவை ரெட்டியார் பாளையம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவரது பாட்டி செந்தாமரை. இவர் நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள கழிப்பறைக்கு சென்ற போது மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரது மகள் காமாட்சி செந்தாமரையை தூக்க சென்ற போது அவரும் மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த பேத்தி பாக்கியலட்சுமி , கழிப்பறைக்குச் சென்றபோது அவரும் மயங்கி விழுந்துள்ளார் . இது குறித்து புதுச்சேரியில் ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மயங்கி விழுந்த மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . ஆனால் வழியிலேயே செந்தாமரையும், காமாட்சியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாக்கியலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அதே பகுதியை சேர்ந்த செல்வராணி என்ற 15 வயது சிறுமியும் வீட்டில் மயங்கி விழுந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கழிப்பறையில் விஷவாயு கசிந்ததில் மூன்று பேர் அடுத்தடுத்து பலியான சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



