கற்பூரம் அடித்து சத்தியம்..!! ‘லட்டில் கலப்படம் செய்திருந்தால், தன்..?’ முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செயலால் பரபரப்பு..

 
கருணாகர் ரெட்டி- திருப்பதி லட்டு


திருப்பதி லட்டில் கலப்படம் செய்திருந்தால் தனது குடும்பமே அழிந்துபோகட்டும் என முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு,  மிக குறைந்த விலைக்கு, அதாவது ஒரு கிலோ நெய் ரூ.320 முதல் ரூ.411 என்ற விலையில் நெய் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தரமற்ற நெய் காரணமாக , லட்டு தரம் மிகவும் குறைந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.   இந்நிலையில் ஆந்திராவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆன பிறகு,  திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரம் குறித்த புகாரை கையில் எடுத்தார்.  

திருப்பதி லட்டு

இதுகுறித்து பரிசோதனை செய்யுமாறு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்ட நிலையில், குஜராத்தில் உள்ள என்டிடிபி பரிசோதனை மையத்துக்கு கடந்த ஜூலை மாதத்தில் நெய் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  ஆய்வு முடிவில், நெய்யில்   மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.  திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.  நாடு முழுவதும் உள்ள பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து  திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதற்கு பரிகாரமாக, அர்ச்சகர்கள் சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகம் நடத்தினர்.   

இந்நிலையில் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும்,  ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் திருப்பதி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கருணாகர் ரெட்டி ஏழுமலையான் கோவிலில் தெப்பக்குளத்தில் புனித நீராடினார்.  தொடர்ந்து கோவிலுக்கு எதிரே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றிய அவர்,  “தான் அறங்காவலர் குழு தலைவராக இருந்தபோது லட்டில் கலப்படம் செய்திருந்தால்,  தமது குடும்பமே அழிந்து போகட்டும்” என கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. 

‘ஒருவருக்கு ஒரு லட்டு இலவசம்’..இனிமேல் சலுகை லட்டு கிடையாது : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு !

கருணாகர் ரெட்டியின் செயலை தடுத்து நிறுத்திய போலீசார்,  உடனடியாக அவரை அங்கிருந்து வெளியேற்றினர்.  தொடர்ந்து தமது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த  கருணாகர் ரெட்டி, “முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பெரிய தவறு செய்து விட்டார்.  தனது அரசியலுக்காக ஏழுமலையானை பயன்படுத்திக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் உண்மை தெரிய வேண்டும் என்றால் சிபிஐ அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.  அப்போதுதான் உண்மை தெரியவரும். தான் எந்த தவறும் செய்யவில்லை” என்று தெரிவித்தார்.