நாட்டிலேயே நீளமான கண்ணாடி பாலம்- செப்.25 திறப்பு! எங்கு தெரியுமா?
விசாகப்பட்டினத்தில் நாட்டிலேயே நீண்ட கண்ணாடி பாலம் செப்டம்பர் 25 ம் தேதி முதல் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கைலாசகிரி மலைப்பகுதியில் நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி பாலம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது. இந்த பாலத்தில் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட மக்களைத் தாங்கும் திறன் கொண்டது. ஒரு சதுர மீட்டருக்கு 500 கிலோ எடையுள்ள சுமைகளையும் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி, 40 பேர் கொண்ட குழுக்களாக மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வங்க கடலோரத்தில் அமைந்து இந்த கண்ணாடி பாலத்தில் கைலாசகிரி மலை மீது நின்று இயற்கை அழகுடன் கடற்கரையை காணும் வகையில் அமைந்துள்ள இந்த பாலம் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் புயல்களையும், கடலோர நகரம் சந்திக்கும் சூறாவளிகளையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி பாலம், விரைவில் விசாகப்பட்டினத்தின் புதிய அடையாளமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா வளர்ச்சிக்கும், மாநிலத்தின் அடையாளத்துக்கும் இது ஒரு பெரும் பங்குவகிக்க உள்ளது.


