இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது!

 
Covid Covid

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,690 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிக்கு கணிசமாக குறைந்து வருகிறது. நேற்று இந்தியாவில் 2,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்  1,690 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,76,599 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19,613 ஆக குறைந்தது. நேற்று ஒரே நாளில் 3,469 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் மொத்த குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,44,25,250 ஆக அதிகரித்துள்ளது.  கொரோனாவுக்கு நேற்று மேலும் 14 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,31,736 ஆக உயர்ந்துள்ளது.