நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 
Covid Positive

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோன பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 6 ஆயிரத்தை தாண்டி தினசரி பாதிப்பு பதிவாகி வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் 6,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சனிக்கிழமை 6,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் நேற்று முன் தினம் 5,357 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று  5,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 5,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 68 ஆயிரத்து 172 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 3,761 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நாடு முழுவதும் இதுவரை 4 கோடியே 42 லட்சத்து 79 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 93 ஆக உயர்ந்துள்ளது. இதுநேற்றை விட 1,894 அதிகமாகும். கொரோனா பாதிப்பால் நேற்று டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தானில் தலா 3 பேர், கர்நாடகாவில் 2 பேர் மற்றும் குஜராத், அரியானா, மகாராஷ்டிரா, தமிழ்நாட்டில் தலா ஒருவர் என 15 பேர் இறந்துள்ளனர். மேலும் கேரளாவில் விடுபட்ட 6 மரணங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரமாக உயர்ந்துள்ளது.