"போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் மண்டியிட்டது" - லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய்
இந்தியாவின் அனைத்து ராணுவ தளங்களும், அனைத்து நிலைகளும் தொடர்ந்து முழுமையாக செயல்பாட்டில் உள்ளன, தேவை ஏற்பட்டால் எந்தவொரு எதிர்கால பணிகளையும் மேற்கொள்ள தயாராக உள்ளன என ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் கூறினார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், “இந்தியாவின் அனைத்து ராணுவ தளங்களும், அனைத்து நிலைகளும் தொடர்ந்து முழுமையாக செயல்பாட்டில் உள்ளன, தேவை ஏற்பட்டால் எந்தவொரு எதிர்கால பணிகளையும் மேற்கொள்ள தயாராக உள்ளன. பாகிஸ்தான் ஏவிய துருக்கி ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்பட்டன. உலகின் எந்த தொழில்நுட்பத்தையும் வீழ்த்த தயாராக இருக்கிறோம். 140 கோடி இந்திய மக்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி. இந்திய விமானப்படை வீரர்கள் இரவும், பகலுமாக விமானங்களை
இயக்கினர். போரில் பாகிஸ்தான் இந்தியாவிடம் மண்டியிட்டது.
இந்தியா மீதான தாக்குதலின்போது பாகிஸ்தான் தரப்பு சீன ஏவுகணைகளை பயன்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளின் தன்மை மாறிவிட்டது. பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதலில் பொதுமக்கள்
பாதிக்கப்படுகின்றனர். 1970 ஆஷஸ் தொடரில் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்களான டென்னிஸ் லில்லி, ஜெஃப் தாம்ப்சன் ஆகியோர் இங்கிலாந்து பேட்டர்களை துவம்சம் செய்தனர். எப்படி லில்லியும், தாம்ப்சனும் இங்கிலாந்தை மிரட்டினார்களோ அதேபோல் இந்திய வான்படை மிரட்டி வருகிறது. தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் தலையீடு செய்தது பரிதாபத்திற்கு உரியது. அதனால்தான், நாம் தக்க பதிலடி கொடுப்பதை தேர்ந்தெடுத்தோம். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் மே 7ல் இந்தியா குறிவைத்த 9 பயங்கரவாத இலக்குகளில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்” என்றார்.


