விண்வெளிக்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா.. உலகமே உற்றுநோக்கும் ‘ஆக்ஸியம்’ 4 திட்டம்..

 
Axiom 4 Axiom 4


ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் ஆய்வுக்காக இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு புறப்பட்டார்.  

 இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் ‘ஆக்ஸியம் - 4’ திட்டத்தின் கீழ் இன்று சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் ஃப்ளோரிடாவிலுள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட்  இந்திய நேரப்படி நண்பகல் 12.02 மணிக்கு  விண்ணில் ஏவப்பட்டது. இதில்  இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா,  முன்னாள் நாசா வீரர் பெக்கி விட்சன்,  ஹங்கேரி வீரர்  திபோர் கபு, போலன்ந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கீ  ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

Axiom 4

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ‘அக்ஸியம் - 4’ திட்டத்தை  இஸ்ரோ,  நாசா,  ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் கூட்டு முயற்சியாக செயல்படுத்தியுள்ளன.   இதில் நாசா விஞ்ஞானி பெக்கி விட்சன் திட்டத்தை தலைமையேற்று குழுவை வழிநடத்துவார். மற்ற மூன்று பேரும் அவரவர் நாடுகளில் இருந்து முதன்முறையாக விண்வெளி பயணம் மேற்கொள்ளும் வீரர்கள் ஆவர்.  

Image

முன்னதாக இந்த  ஆக்ஸியம்-4 விண்வெளி பயணத்திட்டம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக   6 முறை ஒத்திவைக்கப்பட்டது.  மோசமான வானிலை மற்றும் திரவ ஆக்ஸிஜன் கசிவு காரணமாக இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று வானிலை 90% சாதமாக இருப்பதால் திட்டம் சாத்தியமாகியிருக்கிறது. இவர்கள் 28 மணி நேர பயணத்திற்கு பிறகு நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைவார்கள் என கூறப்படுகிறது.  மணிக்கு 6000 கி,மீ வேகத்தை  ஸ்பேஸ் எக்ஸ் விணகம் எட்டியுள்ளது. 

 இவர்கள் 14 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 60 ஆய்வுகளை மேற்கொள்ள உள்ள நிலையில், இந்தியா சார்பில் சுபான்ஷு சுக்லா 7 ஆய்வுகளை மேற்கொள்வார் என இஸ்ரோ  தெரிவித்துள்ளது.