ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை முடக்க திட்டம்!!

 
ration card

 ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை முடக்க டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது.

டெல்லியில் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.  இதன் மூலம் ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய ரேஷன் பொருட்கள் எளிதில் அவர்களை சென்றடையும் என்றும் இலவச ரேஷன் பொருட்கள் முறையற்ற நபர்களின் பிடியில் செல்லாமல் இது தடுக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் அனுமதி அளிக்க மறுத்து விட்டதால் இது கிடப்பில் போடப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்திக் கொள்ளலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ration

இந்நிலையில் குடும்ப அட்டைகள் தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாததை கணக்கெடுக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது.  கடந்த மூன்று மாதங்களாக எந்த பொருட்களும் வாங்காத ரேஷன் அட்டைகளை கணக்கிட்டு அதனை விரைவில் முடக்க டெல்லி அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  முதற்கட்டமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.  அவற்றில் எந்த ஒரு பொருளும் வாங்காமல் இருப்பதற்கான சரியான காரணத்தை குடும்ப அட்டைத்தாரர் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கப்படும் காரணம் ஏற்புடையதாக இல்லை என்றால் அவர்களின் குடும்ப அட்டை முடக்கப்படும்.அதேபோல் கணக்கெடுப்பின்போது சம்பந்தப்பட்ட முகவரியில் அட்டைத்தாரர்  இல்லை என்றாலும் அவரின் குடும்ப அட்டை முடக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

gg

டெல்லியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக அங்கேயே தங்கி பணிபுரிந்து வரும் நிலையில் கொரோனா  காரணமாக அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர்.  இதனால் ஏராளமானவர்களின் குடும்ப அட்டைகள் பயன்படுத்தாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.