வயநாடு தொகுதியில் களமிறங்குகிறாரா பிரியங்கா காந்தி?? கேரள காங்கிரஸ் திட்டம்..

 
Priyanka gandhi

ராகுல் காந்தி தகுதி நீக்கத்தால்  வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை களமிறக்க கேரள மாநில காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு  மோடி என்ற பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம்  தீர்ப்பு அளித்தது.  அதேநேரம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக  ராகுல்காந்தி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து,  அதற்கு அனுமதி அளிக்கும் விதமாக  30 நாட்கள் அவகாசம் அளித்து  நீதிமன்றம் பினை வழங்கியிருந்தது.   இதனைத்தொடர்ந்து நேற்றையதினம், வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தியை மக்களவை செயலகம் தகுதி நீக்கம் செய்தது.  

rahul
 
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், வயநாடு தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், காலியாக உள்ள  தொகுதிகளுக்கு, 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் இன்று கர்நாடக சட்டசபை தேர்தல் அறிவிப்பின் போது வயநாடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி., சந்தோக்சிங் சவுத்ரி மறைவு, லட்சத்தீவு தேசியவாத காங்கிரஸ் எம்.பி., முகமது பைசலுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை ஆகிய விவகாரம் போன்றவற்றால் காலியாக இருக்கும்  தொகுதிகளுக்கும் இன்றைய தினம் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை களமிறக்க கேரள மாநில காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  தகுதி நீக்கத்திற்கு எதிரான சட்டப்போராட்டத்தில்  ராகுல் காந்திக்கு சாதமான சூழல் இல்லை என்றால்,  அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் ,  வயநாடு தொகுதியில் பிரியங்காவை களமிறக்க திட்டமிட்டுள்ளது.