மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் இல்லை ஆனால் மம்தா பானர்ஜி நாட்டில் ஜனநாயகம் பற்றி பேசுகிறார். நட்டா குற்றச்சாட்டு

 
நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது – மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்

மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் இல்லை. முழு அராஜகமும் நடக்கிறது. ஆனால் முதல்வர் நாட்டில் ஜனநாயகம் பற்றி பேசுகிறார் என்று மம்தா பானர்ஜியை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் கலந்து கொண்ட அந்த கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா, பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பா.ஜ.க.வினர் மத்தியில் பேசுகையில் கூறியதாவது: மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலின் போது நாம் கண்ட வன்முறை மற்றும் கொலைகள் முன்னெப்போதும் இல்லாதவை. இது ஜனநாயகத்தின் பிரதிபலிப்பா?. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இப்படித்தான் தேர்தல் நடக்கிறதா?. 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு  தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளை கண்டோம். 

ஜே.பி.நட்டா

ஆனால் கிராமப்புற தேர்தல்களின் போது நாம் கண்ட வன்முறைகள் இங்கு பிரிவினையின் இரத்தக்களரி நாட்களை ஒத்திருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் ஜங்கிள் ராஜ் நடந்து வருகிறது. மக்கள் பேச அனுமதிக்கப்படவில்லை. மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் இல்லை. முழு அராஜகமும் நடக்கிறது. ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி நாட்டில் ஜனநாயகம் பற்றி பேசுகிறார், ஜனநாயகத்தின் சாம்பியன் போல் நடிக்கிறார். மேற்கு வங்கத்தில் வன்முறை நடந்து  கொண்டிருக்கிறது, ஆயிரக்கணக்கான பா.ஜ.க.வினர் வீடுகளை இழந்துள்ளனர், மம்தா சகோதரி ஆதாரம் கேட்கிறார். இதுதான் மாநிலத்தின் நிலைமை. 

திரிணாமுல் காங்கிரஸ்

வரும் நாட்களில் பா.ஜ.க. ஜனநாயக ரீதியில் திரிணாமுல் காங்கிரஸை தோற்கடிக்கும். கிராமப்புற தேர்தல்களில் பா.ஜ.க. நல்ல  செயல்திறனை கொண்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டாலும், நம் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. அராஜகமான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற பா.ஜ.க.வினர் கடுமையாக போராடி வருகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் இருந்து 35க்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.