வக்பு சட்டத்திருத்த மசோதா- எதற்காக ஒரு மதத்தின் உரிமையில் மற்றொரு மதத்தினர் தலையிட வேண்டும்?: கனிமொழி
வக்ஃபு வாரியத்தில் மற்ற மதத்தினரை அனுமதிக்கும் சட்டத்திருத்தத்திற்கு கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே நாட்டில் பல மசூதிகள் ஆபத்தில் இருக்கின்றன.
வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து மக்களவையில் பேசிய எம்.பி கனிமொழி கருணாநிதி, “வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம் இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு முற்றிலும் எதிரானது. இந்த சட்டத்திருத்தம் இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கிறது. பாசிச பாஜகவின் சட்ட திருத்தம் இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரான மட்டுமல்ல, மனித சமூகத்திற்கே எதிரானது. எதற்காக ஒரு மதத்தின் உரிமையில் மற்றொரு மதத்தினர் தலையிட வேண்டும்? இஸ்லாமியர் இல்லாதவர்கள் வக்ஃபு வாரியங்களில் இடம்பெறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இந்து அல்லாதவர்களை இந்து கோயிலை நிர்வகிக்க அனுமதிப்பீர்களா? கிறிஸ்தவர்களோ இஸ்லாமியரோ இந்துக் கோயில்களை நிர்வகிக்கும் குழுவில் இருக்க இதேபோல அனுமதிப்பீர்களா?
குறிப்பிட்ட மதம், சமுதாயத்தினரை குறி வைத்து இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது, மத சுதந்திரத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தலையிடுகிறது. இந்தியா மதசார்பற்ற நாடு என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவர். அரசு சொத்துகள் வக்பு வாரியத்திடம் இருந்தால் அதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுக்கலாம் என்பது ஏற்கதக்கதல்ல” என்றார்.